ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்படுபவர்கள் பாலோன் தி'ஓர் (தங்கப்பந்து) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விருதுக்காக தலா 30 வீரர், வீராங்கனைகள் பரிந்துரை செய்யப்படுவார்கள். அவர்களை வீரர்கள், பயிற்சியாளர்கள், சங்க நிர்வாகிகள், விளையாட்டு செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வாக்களித்து தேர்வு செய்வார்கள். இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பிடிப்பதே வீரர்களுக்கு பெருமைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், விருது பெற பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடும் கரீம் பென்சிமா, திவுட் கோர்டோஸ்ட், லிவர்பூல் அணி வீரர் முகமது சாலா, டிரென்ட் அலெக்சாண்டர், மான்செஸ்டர் சிட்டி அணியின் கெவின் டி பிரையன், எர்லிங் ஹாலண்டு, பேயர்ன் மூனிச் கிளப்பின் ஜோஸ்வா கிம்மிச், சாடியோ மானே, மான்செஸ்டர் யுனைடட் நட்சத்திரம் கிறிஸ்டியோனா ரெணால்டோ , பிஎஸ்ஜி அணியில் கிலியன் எம்பாப்பே உட்பட 30 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இருந்து கரீம் பென்சிமா (34 வயது, பிரான்ஸ்) தேர்வு செய்யப்பட்டு, பாரிசில் நடைபெற்ற விழாவில் தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பு வெளியாகும் வரை, மற்றொரு பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பேவுக்குதான் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2021-22 சீசனில் 46 போட்டியில் 44 கோல் அடித்த பென்சிமா, ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
கடந்த ஆண்டு தங்கப்பந்து விருது வென்றவரும், இதுவரை 7 முறை விருது பெற்றவருமான பிஎஸ்ஜி அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டீனா) கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாக பரிந்துரை பட்டியலில் கூட இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 5 முறை தங்கப்பந்து விருது பெற்றுள்ள ரொனால்டோவுக்கு இம்முறை 20வது இடமே கிடைத்தது.
0 Comments