ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமிதா தனிநபர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
10 மீட்டர் ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் யிங் சென்னை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அதே பிரிவில் மற்றொரு இந்தியரான திலோத்தமா சென் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
50 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களையும் வென்று இந்திய மகளிர் அசத்தினர். திவ்யான்ஷி முதலிடமும் (547), வர்ஷா சிங் 2-ஆம் இடமும் (539), தியானா 3-ஆம் இடமும் (523) பிடித்தனர்.
25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ரிதம் சங்வான் 573-575 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியாவ் ஜியாருய்ஸýவானிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றார்.
25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் விஜய்வீர் சித்து 574 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ஈஷா சிங், சிகா நர்வால், வர்ஷா சிங் ஆகியோர் கூட்டணி 16-6 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவை வென்றது.
ஏர் ரைஃபிள் ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ரமிதா, நான்சி, திலோத்தமா சென் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 16-2 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றியது.
ஏர் ரைஃபிள் ஜூனியர் ஆடவர் அணிகள் பிரிவிலும் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்ரீகார்த்திக் சபரிராஜ் ரவிசங்கர், விதித் ஜெயின் அடங்கிய அணி இறுதிச்சுற்றில் 17-11 என சீனாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
நாளில் இறுதியாக, 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகளில் இந்தியாவின் பாயல் கத்ரி, ஆதர்ஷ் சிங் ஜோடி 17-9 என்ற புள்ளிகள் கணக்கில் சீன இணையை வென்று பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதே பிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான சமீர், தேஜஸ்வினி 16-2 என்ற கணக்கில் சீன கூட்டணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இதில் சமீருக்கு இப்போட்டியில் இது 2-ஆவது வெண்கலப் பதக்கமாகும். பதக்கப் பட்டியல்: தற்போதைய நிலையில் இந்தியா, 10 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 18 தங்கம் உள்பட 37 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
0 Comments