கடந்த பிப். 5-ல் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்தது. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
இதற்கிடையே, இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டது.
அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உட்பட 24 பேர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி ஹேமந்த் குப்தா, "இந்த விவகாரத்தில், மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.
மற்றொரு நீதிபதி சுதான்ஷு துலியா, "ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறேன். ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லாது. ஹிஜாப் அணிவது அவரவர் தேர்வு.
எனவே, கர்நாடக அரசு ஹிஜாபை தடை செய்வதாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்கிறேன். ஹிஜாப் போன்ற அத்தியாவசியமான மத நடைமுறையில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமில்லை என்பதால், அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்கிறேன்.
நான் மாணவிகளின் கல்வியையே முக்கியமாகக் கருதுகிறேன். கிராமங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்ந்து, இந்த தீர்ப்பை அளிக்கிறேன்'' என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இரு நீதிபதிகளும், "எங்கள் இருவரின் தீர்ப்பும் மாறுபட்டு வெளியாகியுள்ளதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கிறோம்" என்றனர்.
0 Comments