மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாக பிரதமர் மோடிகடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டார். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் `ரோஜ்கார் மேளா'வை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு நகரங்களில், ஒரே நேரத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 75,226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மத்திய அமைச்சர்கள் 50 பேர், சுமார் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினர். மற்றவர்களுக்கு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இவர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
0 Comments