முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 03.06.2021 அன்று, 'தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்' என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி.திலகவதி, 2011ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன், 2011ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், 2013ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ப.மருதநாயகம், 2015ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற மறைமலை இலக்குவனார், 2015-16 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் முனைவர் இரா.கலைக்கோவன், 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்.இராமகிருஷ்ணன், 2016 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா.ராஜன், 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி. குருஸ், 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 16.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments