நாட்டின் கரோனா நிலவரம், சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார தயார்நிலை, தடுப்பூசி திட்டம், புதிய கரோனா வைரஸ்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவுவது குறித்து சுகாதாரத் துறை செயலாளர், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகள் சார்பில் வீடியோ வாயிலாக கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் தினசரி கரோனா தொற்று 5.9 லட்சமாக இருப்பதாகவும் இந்தியாவில் தினசரி தொற்று 153 ஆக இருப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்அனுராக் தாக்குர், சுகாதாரத் துறைஇணையமைச்சர் பாரதி பிரவீண் பவார், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமரின் அறிவுரைகளை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உத்தர பிரதேசத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்தமாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை உத்தராகண்ட், ஹரியாணா அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், டெல்லி மாநில அரசுகள் சார்பில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
0 Comments