Recent Post

6/recent/ticker-posts

74வது குடியரசு தின விழா - ஜனாதிபதி தேசியக் கொடியேற்றினார் / 74th Republic Day Celebration - President hosts the National Flag

  • நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
  • விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு, எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல்-சிசி அழைக்கப்பட்டிருந்தார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து, ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதைக்கு, குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாகனத்தில் அழைத்து வந்தார். 
  • குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு கலந்துகொள்ளும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.
  • இருவரையும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
  • தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றிவைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
  • பின்னர், கமாண்டர் லெப். ஜெனரல் திராஜ் சேத் தலைமையில் ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. கடமை பாதையில், உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகளை ஏந்திய ராணுவ வாகனங்கள், அர்ஜுன் பீரங்கி வாகனங்களுடன், பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து வந்தனர். முதல் அணியாக எகிப்து நாட்டின் ராணுவ வீரர்கள் 144 பேர், கர்னல் மகமூத் முகமது அப்தெல் ஃபதா எல் கரசாவி தலைமையில் அணிவகுத்து வந்தனர். 
  • இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில், எகிப்து படைப் பிரிவு பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள், மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
  • தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில், தஞ்சை பெரிய கோயில் கோபுரம், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 
  • கல்வி, அறிவாற்றல், கலை, போர், வேளாண்மை ஆகியவற்றில் பெண்கள் வலிமையோடுத் திகழ்கிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. 
  • முகப்பில் அவ்வையார் கம்பீரமாக தோற்றமளித்தார். இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பால சரஸ்வதி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி, விவசாயப் பணி மேற்கொள்ளும் 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரது சிலைகளும் இடம் பெற்றிருந்தன. ஊர்தியின் முகப்பில் தமிழ்ப் பெண்களின் வீரத்தைப் போற்றும் வகையில் வேலு நாச்சியார், குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
  • அணிவகுப்பின் இறுதி நிகழ்ச்சியாக, விமானப்படையின் போர் விமானங்கள் சாகசங்கள் நிகழ்த்தி, பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்திய விமானப்படையின் 45 விமானங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel