சென்னையில் குடியரசு தினவிழா தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார் / Tamil Nadu Governor RN Ravi hoisted the national flag on Republic Day in Chennai
சென்னை மெரினா கடற்கரையில் நடப்பாண்டு முதல்முறையாக உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெற்றது. வழக்கமாக விழா நடைபெறும் காந்தி சிலை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்த முறை இடம் மாற்றப்பட்டது.
காலை 7.50 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், 7.52 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அங்கு வந்தனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநருக்கு முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார். காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மேடைக்கு வந்து வீரதீர செயல்புரிந்த 5 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
சென்னை அமைந்தகரை தலைமை காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, திருச்செந்தூர் புன்னக்காயல் அந்தோணிசாமி, நாகர்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகிய 5 பேருக்கு அண்ணா பதக்கம் , ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் கோவை மாவட்டம், தெற்கு உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இனயத்துல்லாவுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டது.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக புதுக்கோட்டை ஆலவயல் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிவனேசன் ஆகிய 5 பேருக்கு காந்தியடிகள் காவல் பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல் பரிசு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2வது பரிசை திருச்சி கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தயாளன் பெற்றுக் கொண்டார். 3வது பரிசு திண்டுக்கல் போலீஸ் நிலையத்துக்கு கிடைத்தது. விருது பெற்றவர்கள் அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதை தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் 22 அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன.
முதல் அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 'தமிழ்நாடு வாழ்க' என்று பெயர் பொறித்த அலங்கார ஊர்தி வந்தது. அதில் நாதஸ்வர மங்கள இசையுடன் பரத நாட்டிய கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர்.
2வது ஊர்தியாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் இடம் பெற்ற ஊர்தி அணிவகுத்து வந்தது. 3வது ஊர்தியாக 'போதையில்லா தமிழ்நாடு ' என்பதை சித்தரிக்கும் காவல்துறையின் அலங்கார ஊர்தி வந்தது.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சரித்து பேசும் வார்த்தைகளுடன், போதையில்லா தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக அவர் பேசுவது அதில் ஒளிபரப்பப்பட்டது.
4வது ஊர்தியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அலங்கார ஊர்தி வந்தது. அந்த ஊர்தியில் அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியத்தை உருவாக்கும் காட்சிகளும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சித்தரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
0 Comments