ஆதி மகோத்சவம் என்ற பிரம்மாண்டமான தேசிய பழங்குடி திருவிழாவை தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை தேசிய அளவில் எடுத்துரைக்கும் இந்த முயற்சி, பழங்குடி கலாச்சாரம், கலைப் பொருட்கள், உணவு, வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலைகளின் உணர்வைப் போற்றுகிறது.
இது, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பால் (ட்ரைஃபெட்) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.
திருவிழாவிற்கு வருகை தந்த பிரதமர், பகவான் பிர்சா முண்டாவிற்கு மலர் மரியாதை செலுத்தியதோடு, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த விற்பனையகங்களைப் பார்வையிட்டார்.
புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 16 முதல் 27ம் தேதிவரை இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ள 200 நிலையங்களில், நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினரின் வளமையான மற்றும் பண்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில் சுமார் 1,000 பழங்குடியின கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த 2023 ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கைவினைப்பொருட்கள், கைத்தறி, மண்பாண்டங்கள், நகைகள் போன்றவற்றோடு பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட ஸ்ரீ அண்ணா பயிர்வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
0 Comments