டெல்லி - மும்பை விரைவு சாலைக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2019 மார்ச் 8-ம்தேதி அடிக்கல் நாட்டினார்.
இதன்படி, டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 1,386 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. இது நாட்டின் மிக நீளமான விரைவு சாலையாகும்.
தற்போது 8 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த விரைவு சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்த இடவசதி உள்ளது.
டெல்லி முதல் மும்பை வரைஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலைஅமைக்கப்பட்டு வருகிறது. சாலை நெடுகிலும் 500 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குறுக்கே மனிதர்கள், விலங்குகள் செல்லாத வகையில் சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தசாலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். 50 கி.மீ. இடைவெளியில் ஓய்வெடுக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அங்கு விடுதி, ஓட்டல், ஏடிஎம், மளிகை கடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சாலையோரம் 93 இடங்களில் சிறாருக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன. விபத்து ஏற்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட ஏதுவாக, ஆங்காங்கே முக்கிய இடங்களில்ஹெலிபேட் வசதியும் செய்யப்படுகிறது.
விரைவு சாலையின் ஒரு வழித்தடம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும். விரைவு சாலை முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி - மும்பை விரைவு சாலையில் முதல் கட்டமாக டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் லால்சாட் வரை ரூ.12,150 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 246 கி.மீ. சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
0 Comments