தமிழகத்தின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டத்தில், மார்ச் மாதம் 20ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை, ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பினார்.
இதற்கு, ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் தடை மசோதாவை வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments