அதானி நிறுவன முறைகேட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு - உச்ச நீதிமன்றம் உத்தரவு / Expert panel headed by retired Supreme Court judge to investigate Adani's scandal - Supreme Court order
அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையில் வரலாறு காணாத வகையில் ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில், அதானி குழும முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
அதானி விவகாரம் என்பது மூலதனம் தொடர்பானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி ஆகிய அரசு நிறுவனங்களின் பங்குகள் அதிகம் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
குறிப்பாக இதுபோன்ற சர்ச்சை விவகாரங்கள் வருவதன் மூலம் செபி அமைப்பு சரியான பாதுகாப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்கவில்லை என்பது தெரியவருகிறது. அதனை அவர்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
மேலும் அதானி- ஹிண்டன்பர்க் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான ஒரு கட்டமைப்பை செபி விரைவில் உருவாக்க வேண்டும்.
குறிப்பாக அதானிக்கு எதிரான விசாரணையை செபி நிறுத்தி விட்டதாக தெரிய வருகிறது. மேலும் இந்த விவகாரம் என்பது செபி விதிகளின் எஸ்: 19 என்பது மீறப்பட்டுள்ளதா, பங்கு விலையில் ஏதேனும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பதை செபி விசாரிக்க வேண்டும்.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் ஒரு சிறப்பு நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படுகிறது.
அதில், ஸ்டேட் வங்கி முன்னாள் தலைவர் ஓ.பி.பட், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.தேவ்தத், இன்போசிஸ் மென்பொருள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீல்கேனி, பிரிக்ஸ் நாடுகளின் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் கே.வி.காமத், வழக்கறிஞர் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய ஐந்து பேர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
விசாரணைக்கு ஒன்றிய அரசும், செபி அமைப்பும் உதவ வேண்டும். இதுதொடர்பான விரிவான விசாரணையை தினமும் நடத்தி இரண்டு மாதத்தில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
0 Comments