TNPSC GROUP CUTOFF MARKS: குரூப் - 4 தேர்வு முடிவு | எந்த கட் ஆப் வரை வேலை கிடைக்கும்?: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் சாதி வாரியாக எந்தெந்த தரவரிசை வரை பணி கிடைக்க வாய்ப்புள்ளது என தனியார் பயிற்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடந்த குரூப்-4(Group 4) தேர்வு முடிவுகள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவுகளை வெளியிட்டது.
கடந்தாண்டு தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டபோது 7,301 பணியிடங்களாக அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் கடந்த வாரம் கூடுதலாக சுமார் மூவாயிரம் பணியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 10,117-ஆக அதிகரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வை பொறுத்தவரையில் 300-க்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற போதிலும் சாதிவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் படி அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கே பணிவாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு உத்தேச தரவரிசை பட்டியலை பிரபல தனியார் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant or JA) பணிக்கு OC பிரிவில் 60 ரேங்க் வரையில் எடுத்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
BC பிரிவை பொறுத்தவரையில் 2600 வரையிலும், BC(M) பிரிவில் 250 ரேங்க் வரையிலும், MBC பிரிவில் 1700 ரேங்க் வரை எடுத்தவர்களுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் SC பிரிவை பொறுத்தவரையில் 900, SC(A) பிரிவில் 250, ST பிரிவில் 60 வரை தரவரிசை(Rank list) கொண்டவர்களுக்கு நிச்சயம் பணி வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தட்டச்சர்(Typist) பணியிடங்களை பொறுத்தவரையில், OC பிரிவினர் 35, BC பிரிவினர் 1500, BC(M) பிரிவினர் 150 என்ற தரவரிசைக்குள் இருந்தால் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், MBC பிரிவை பொறுத்தவரையில் 1000 ரேங்கும், SC பிரிவில் 550, SC(A) பிரிவில் 100 மற்றும் ST பிரிவில் 40 வரை தரவரிசை கொண்டவர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி என்று சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல்,சுருக்கெழுத்தர்(Steno) பணியிடங்களுக்கு OC பிரிவில் 15, BC பிரிவில் 600, BC(M) பிரிவில் 50, MBC பிரிவில் 350, SC பிரிவில் 200, SC(A) பிரிவில் 50 மற்றும் பழங்குடியினர் பிரிவான ST-ல் 15 ரேங்க் வரை எடுத்துள்ளவர்களுக்கு கட்டாயம் பணி வாய்ப்பு கிடைக்கும்
குரூப்- 4 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் கட்ஆப்(Cut Off) மதிப்பெண் குறையும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட முதல் போட்டித்தேர்வு என்பதால் தேர்வுக்கு தயாராகி வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு பெரும்பாலானோர் நன்றாக படித்து தேர்வு எழுதியிருந்ததால் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளதாக போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments