சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
அதில், 'மக்களின் உடல்நலம், நலவாழ்வை கருத்தில் கொண்டு எளிதாக உடற்பயிற்சி கூடம் தொடங்க வசதியாக, உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் பெறுவதற்கான தேவை நீக்கப்படும் என்று, கடந்த 2022 மே 5-ம் தேதி திருச்சியில் நடந்த 39-வது வர்த்தகர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தை, தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் முன்மொழிந்தார்.
அதற்கான நோக்க காரண விளக்க உரையில், 'நாட்டில் அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்களை கொண்டுள்ளது தமிழகம்.
எளிதாக பின்பற்றும் வேலைநேரங்களுக்கு சட்டப்பூர்வ வழிவகைகளை உருவாக்குவதால் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்பணியாளர்களுக்கும், தொழிலகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் கிடைக்கும் நன்மைகளை மேற்கோள் காட்டி, பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழில் துறை சங்கங்கள் ஆகியவை வேலைநேர சீர்திருத்தங்களை கொண்டு வர அரசுக்கு விண்ணப்பித்தன.
இதன் அடிப்படையில், கடந்த 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மாநிலத்துக்கு பொருந்தும்வகையில் திருத்தம் செய்ய மாநில
அரசு முடிவெடுத்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களும் பேரவையின் இறுதிவேலை நாளில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
0 Comments