சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 2) நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 19 வயது வீரர் பிரதமேஷ் ஜவஹர், எஸ்தோனியாவின் ராபின் ஜாட்மாவை 147-145 என்ற கணக்கில் வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார்.
இதில் உலகின் 'நம்பர்-1' வீரர், நெதர்லாந்தின் மைக் ஸ்காலசரை சந்தித்தார். முதல் நான்கு சுற்று முடிவில் இருவரும் 119-119 என சமநிலையில் இருந்தனர். ஐந்தாவது, கடைசி செட் முதல் இரு வாய்ப்பில் இருவரும் 20-20 என சமபுள்ளி பெற்றனர்.
கடைசி வாய்ப்பில் பிரதமஷே (10-9) முந்தினார். முடிவில் பிரதமேஷ் 149-148 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார். உலக கோப்பை 'சீனியர்' அரங்கில் இவர் வென்ற முதல் பதக்கம் இது.
அவ்னீத் 'வெண்கலம்'
பெண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அவ்னீத் கவுர், 144-146 என பிரிட்டனின் எல்லா கிப்சனிடம் தோல்வியடைந்தார்.
அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவ்னீத், துருக்கியின் இபெக்கை சந்தித்தார்.
துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவ்னீத் 147-144 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
'கலப்பில்' தங்கம்
காம்பவுண்டு பிரிவு கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜாஸ் பிரவின் பங்கேற்றனர். பைனலில் இந்திய ஜோடி, வலிமையான தென் கொரியாவை எதிர்கொண்டது. முதல் மூன்று சுற்று முடிவில் இரு அணிகளும் 117-117 என சமநிலையில் இருந்தன.
கடைசி, நான்காவது சுற்றில் இந்தியா 39-38 என முந்தியது. முடிவில் இந்திய அணி 156-155 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியா 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கம் கைப்பற்றியது.
0 Comments