தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / Tamil Nadu Government's 2 Year Achievement Special Flower: Chief Minister M.K.Stalin released
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்பு காணொலி குறுந்தகடு ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில், அரசு கொரோனா காலகட்டத்தில் பதவியேற்ற நாள் முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டதோடு, இனிவரும் காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது, மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை சென்னை, கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி 14.5.2023 வரை நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
0 Comments