ராஜ்யசபாவில் மேற்கு வங்கத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு பேர், குஜராத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர், கோவாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒருவர் உட்பட, 10 பேரின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது.
இதையடுத்து, இந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, வரும், 24ல் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. குஜராத்திலிருந்து பா.ஜ., சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாபுபாய் தேசாய், கேசரி தேவ் சிங் உட்பட மூன்று பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஜெய்சங்கர் உட்பட மூன்று பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இதேபோல் கோவாவில் இருந்து பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட சதானந்த் தண்டவதேயை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, அந்த கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரயன் உட்பட ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஆனந்த் மஹாராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ராஜ்யசபாவின் ஒரு இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஷாகேத் கோகலே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, 11 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments