மதுரை புதுநத்தம் சாலையில் சொக்கிகுளத்தில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நலத் திட்டத்தில் இணைக்கப்பட்ட இந்த நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
நூலகத்தின் வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கருணாநிதி உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாலை 5.04 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் திறந்து வைத்தார். அமைச்சர்களுடன் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார் ஆகியோரும் உடனிருந்தனர்.
நூலக வரவேற்பரை அருகேயிருந்த கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். நூலகத்தின் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மதுரையின் பழமை, வளர்ச்சியை காட்டும் புகைப்படக் காட்சிகளை முதல்வர் பார்வையிட்டார்.
கீழடி அருங்காட்சியக் காட்சிகள், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் இளைஞர் சிலையை ஆர்வத்துடன் முதல்வர் பார்வையிட்டார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தரையில் முதல்வர் அமைச்சர்களுடன் நடந்து ரசித்தார். அந்த அறையில் இருந்த இருக்கையில் யார் அமர்ந்தாலும் அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அருகே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் தொழில்நுட்பத்தை முதல்வர் கண்டு ரசித்தார்.
அந்த இருக்கையில் முதல்வரும், அமைச்சர் துரைமுருகனும் அமர்ந்தபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்துடன் சில விநாடிகள் அவர்கள் பேசுவது போல திரையில் தெரிந்தது.
30 நிமிடங்களுக்கும் மேல் நூலகத்தின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். 'மதுரையில் இந்த நூலகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். கலைஞர் வழியில் அயராது உழைப்பேன், வாழ்த்துகள்' என பதிவு செய்தார்.
0 Comments