Recent Post

6/recent/ticker-posts

நிலவில் வெற்றிகரமாக இறங்கியது சந்திரயான் 3 - தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு எனும் புதிய சரித்திரம் / Chandrayaan 3 successfully lands on the moon - making new history as the first country to reach the South Pole

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் வடிவமைத்தது. இது 3,895 கிலோ எடை கொண்டது. 
  • ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவருவதால் இம்முறை விண்கலத்தில் லேண்டர், ரோவர் பாகங்கள் மட்டும் இடம்பெற்றன.
  • சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை எல்விஎம்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
  • ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்துகட்ட முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு சந்திரயான்-3 நேற்று மாலை நிலவில் தரையிறங்க தயாரானது. அதற்கான பணிகள் மாலை 5.44 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
  • நிலவில் இருந்து 25 கி.மீ. உயரத்துக்கு வந்தபோது, லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கணினி வாயிலாக தரையிறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது லேண்டரின் வேகம் மணிக்கு 6,000 கி.மீ. என்ற அளவில் இருந்தது. 
  • எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகத்தை குறைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக லேண்டரின் கால்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 திரவ இயந்திரங்களும் சீரான நிலையில் சுமார் 10 நிமிடங்கள் இயக்கப்பட்டன. அதன்மூலம் விண்கலத்தின் வேகத்தை 1,200 கி.மீ அளவுக்கு குறைத்து லேண்டர் 7.4 கி.மீ உயரத்துக்கு கொண்டு வரப்பட்டது.
  • இவ்வாறு லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையில் இருந்து 800 மீட்டர் உயரத்தை வந்தடைந்ததும், அதுவரை சாய்ந்தவாறு இருந்த விண்கலத்தின் கால்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக செங்குத்தாக கீழ்நோக்கி நேராக திருப்பப்பட்டது.
  • அதேநேரம், லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு கணினி, விண்கலத்தில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து சரியான இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையை உறுதிசெய்தது. 
  • அதன்பின் அந்தப் பாதையில் பயணத்தை தொடர்ந்த லேண்டர் தனது திரவ இயந்திரங்களின் விசையை குறைத்து 150 மீட்டர் உயரத்துக்கு வந்தது. இந்த கட்டத்துக்கு வந்ததும் லேண்டர் அப்படியே சில விநாடிகள் நிறுத்திவைக்கப்பட்டது. 
  • அப்போது நிலவின் ஈர்ப்பு விசையால் லேண்டர் கீழே இழுக்கப்படாமல் இருக்க அதன் கால்களில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேல்நோக்கிய தள்ளுவிசை கொடுக்கப்பட்டது.
  • இந்த சூழலில், விண்கலத்தில் இருந்த 'இடர் உணர் ஆபத்து தவிர்ப்பு கேமரா' உதவியால், தரையிறங்க வேண்டிய பகுதியை ஆராய்ந்து, அதில் பாதுகாப்பான ஒரு சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் 150 மீட்டரில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் இறக்கப்பட்டது. 
  • அதில் இருந்த லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் வாயிலாக விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதையும் கணக்கிட்டு தரையிறங்க ஏதுவான வேகமும் கட்டுக்குள் வைக்கப்பட்டது.
  • அடுத்ததாக லேண்டர் 10 மீட்டர் உயரத்துக்கு கொண்டு வரப்பட்டதும், நிலவின் மேற்பரப்பில் இருந்து புழுதி மேல் எழும்புவதை தவிர்க்க, திரவ இயந்திரங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. 
  • மிகவும் பரபரப்பான அபாயக் கட்டத்தை கடந்து, மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளங்களுக்கு இடையே லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று புதிய சகாப்தம் படைத்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel