13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin provided 1,591 houses to Sri Lankan Tamils in 13 districts
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.176.02 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் 2021 நவ.2-ல் வேலூர் அருகே மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், முகாம்களில் ரூ.11.33 கோடி மதிப்பில் இதர அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591 குடியிருப்புகள் திறப்பு விழாவேலூர் அருகேயுள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 12 மாவட்டங்களில் கட்டியுள்ள குடியிருப்புகளை காணொலி வாயிலாகவும் வேலூர் முகாமில் நேரடியாகவும் திறந்து வைத்து பயனாளிகள் வசம் வீடுகளை ஒப்படைத்தார்.
பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், புதிய குடியிருப்புகள் குறித்து இலங்கை தமிழர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.
0 Comments