தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்.10) காலை தொடங்கியது. 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வணிக வரி நிலுவைத் தொகை குறித்த புதிய சமாதான திட்டத்தை அறிவித்தார்.
கடந்த ஆண்டுகளில், இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், புதியதோர் அணுகுமுறையோடும், கூடுதல் சலுகையோடும், இந்த திட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50,000-க்குட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். தமிழகத்தின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரிநிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல்முறை.
அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் தமது நிலுவைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள்.
இப்படி, நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர, இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.10 கோடிக்கும் மேலாக நிலுவையில் உள்ளவர்கள், என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர்.
மேற்கூறிய நான்கு வரம்பில் முதல் வரம்பில் உள்ளவர்கள், மொத்த நிலுவைத் தொகையில், 20 விழுக்காட்டைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம்.
அல்லது நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம்.
இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிகர்களும், நிலுவையில் உள்ள வணிக வரி வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டைக் கட்டினால் நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் வரி விலக்கை ஏற்றுக்கொண்டிருப்பவர்களும், வரி விதிப்பை ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்திருப்பவர்களுக்கும் என தனித்தனியாக நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவைத் தொகையினை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை, அவர்களது கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டித் தொகையும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
தமிழக வணிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 16.10.2023 முதல் நடைமுறைக்கு வரும்.
நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும். அதாவது, 2024ம் ஆண்டு பிப்.15ம் தேதி வரை, இந்த சமாதான திட்டம் நடைமுறையில் இருக்கும். அரசின் இந்த முன்னோடி முயற்சியை முழுமையாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
0 Comments