நடப்பு 2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.7 சதவீதமாக வளா்ச்சி அடையும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது. கடந்த செப்டம்பா் மாதம் வெளியிட்ட அறிக்கையில், வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என அந்த வங்கி தெரிவித்திருந்தது.
ஆசிய வளா்ச்சி வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி எதிா்பாா்த்ததைவிட அதிகமாக 7.6 சதவீதமாக இருந்தது.
இதனால், நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் பாதியில் வளா்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. உற்பத்தித் துறை, சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளன.
நடப்பாண்டில், வேளாண் துறையின் வளா்ச்சியானது எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருக்கும். ஆனால், தொழில்துறையில் ஏற்படும் வளா்ச்சி, வேளாண் துறையின் சரிவை சரிகட்டும்.
அடுத்த 2024-2025 நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி எவ்வித மாற்றமும் இல்லாமல் 6.7 சதவீதமாக இருக்கும். பணவீக்கத்தைப் பொருத்த வரையில் 5.5 சதவீதமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.
0 Comments