தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
19ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பிரதமர் விழாவை தொடக்கி வைக்க, விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து, கபடி, கைப்பந்து, ஜூடோ, பளு தூக்குதல், வில்வித்தை, குத்துச்சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
0 Comments