திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.
அதன்படி 3வது ஆண்டாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நடைபெற்றது.
இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர். துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து 1400-க்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நாள் (ஜனவரி 11) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்தார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். இதில், சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது.
இரண்டாம் நாள் (ஜனவரி 12) அயலகத் தமிழர் தினம் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எனது கிராமம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
0 Comments