எரிசக்தி மற்றும் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் (சி.ஐ.ஐ) இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ரயில்வே மற்றும் சி.ஐ.ஐ தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024, ஜனவரி 4, அன்று ரயில்வே வாரியத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு சைலேந்திர சிங், சிஐஐ-யின் துணை தலைமை இயக்குநர் திருமதி சீமா அரோரா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகார்ரியுமான திருமதி ஜெயா வர்மா சின்ஹா, வாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்திய ரயில்வே, இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் முக்கிய பங்களிப்பு செய்வதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டது. இந்திய ரயில்வே, 2030 ஆம் ஆண்டிற்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு" இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் நிலையங்கள், உற்பத்திப் பிரிவுகள், பெரிய பட்டறைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன, இதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கார்பன் தடங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு பசுமை முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயில் பசுமை முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் எளிதாக்குவதற்கும் சிஐஐ ஜூலை 2016 முதல் இந்திய ரயில்வேயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. அது காலாவதியான பின்னர் மேலும் 03 ஆண்டுகளுக்கு 2019 ஆம் ஆண்டில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்குறிப்பிட்ட 02 புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி வசதிகள் மற்றும் ரயில்வே பணிமனைகளில் ஆற்றல் செயல்திறன் முன்முயற்சியின் விளைவாக 210 இலட்சம் கிலோவாட் எரிசக்தி சேமிப்பும், ரூ.16 கோடி பண சேமிப்பும் ஏற்பட்டதுடன், சுமார் 18,000 டன் கரியமில வாயு வெளியேற்றம் கணிசமாகக் குறைந்தது.
சுமார் 40 நிலையங்கள் பசுமை சான்றிதழைப் பெற்றுள்ளன. ஆண்டுக்கு 22 மில்லியன் கிலோவாட் ஆற்றலையும் 3 பில்லியன் லிட்டர் தண்ணீரையும் சேமிப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.
0 Comments