Recent Post

6/recent/ticker-posts

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு / Electoral Bond Scheme Illegal - Supreme Court Constitutional Bench Ruling

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு / Electoral Bond Scheme Illegal - Supreme Court Constitutional Bench Ruling

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். 

இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் அந்த உத்தரவில், "தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது.

தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். 

கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. 

எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. 

தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். 

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel