போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்க கோரி ஜாமின் மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜி ராஜிநாமாவிற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஜாமின் மனு விசாரணையின் போது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சியை கலைக்க கூடும் என அமலாக்கத்துறை வாதாடி வருகிறது. இதன் காரணமாகவே தனது ஜாமின் மனு நிராகரிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
0 Comments