பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆடைகள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளுக்குத் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை 2026 மார்ச் 31-ம் தேதி வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு திட்டத்தை தொடர்வதன் மூலம் நிலையான கொள்கை நடைமுறை உருவாகும். இது நீண்டகால வர்த்தகத் திட்டமிடலுக்கு அவசியமாகும். குறிப்பாக ஜவுளித் துறையில், நீண்ட கால விநியோகத்திற்கு முன்கூட்டியே பணி ஆணைகளை வழங்க முடியும்.
முன்னதாக மத்திய அமைச்சரவை 31.03.2020 வரை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, அதனைத் தொடர்ந்து 2024, மார்ச் 31 வரை இதனை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும். ஏற்றுமதிக்கான மாநில வரிகள் மற்றும் தீர்வைகளின் தள்ளுபடி என்பது போக்குவரத்து, சுய தேவைக்கு மின்சாரம், பண்ணைத் துறை, ஏற்றுமதி ஆவணங்கள் மீதான முத்திரை வரி, கச்சா பருத்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்ற உள்ளீடுகளுக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி, பதிவு செய்யப்படாத விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல், போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
0 Comments