உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த அண்டை நாடுகளான பின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன.
ஆனால், ஸ்வீடன் நேட்டோவில் இணைய மற்றொரு நேட்டோ உறுப்பினரான துருக்கி தடையாக இருந்து வந்தது. இஸ்லாமிய மதத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவில்லை என்றும், பயங்கரவாத குா்து இனக் குழுக்களை ஆதரிப்பதாகவும் ஸ்வீடன் மீது குற்றஞ்சாட்டி வரும் துருக்கி, அந்நாட்டை நேட்டோவில் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், துருக்கியின் ஆட்சேபணை காரணமாக, ஸ்வீடனின் அண்டை நாடான பின்லாந்து மட்டும் நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தது.
இதனிடையே, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஸ்வீடனை நேட்டோவில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்த நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடனை இணைப்பதற்கான ஆட்சேபணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று துருக்கியிடம் அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக கடந்த 7-ஆம் தேதி ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, பெல்ஜியத்தின் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் ஸ்வீடன் தேசியக்கொடி இன்று(மார்ச். 11) ஏற்றப்பட்டது.
ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோர் கொடியேற்றத்தின்போது உடனிருந்தனர்.
0 Comments