உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்றது.
14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 71-வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
17 வயதான டி.குகேஷ் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சுமார் ரூ.78.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் குகேஷ். இதற்கு முன்னர் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தார்.
மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ள இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் 17 வயதான குகேஷ்.
இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
மகளிருக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் சீனாவின் ஸோங்ஸி டான் 9 புள்ளிகளை குவித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, சீனாவின் டிங்ஜேய் லெய் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
கொனேரு ஹம்பி கடைசி சுற்றில் சீனாவின் டிங்ஜேய் லெயையும் ஆர். வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரினா லக்னோவையும் தோற்கடித்தனர்.
கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களை பிடித்தனர்.
இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். அவர், தனது கடைசி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை தோற்கடித்தார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். விதித் குஜராத்தி தனது கடைசி சுற்றில் பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தார். ஃபிரோஸ்ஜா அலிரேசா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அபசோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.
0 Comments