இலங்கையின் ஆரம்ப சுகாதார நிலைய சேவைகளின் தர மேம்பாடு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க 150 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 12,500 கோடி) நிதியளிக்க உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை அளிக்கும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் அவை அளிக்கும் சேவையின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் இத்திட்டத்திற்கு உலக வங்கி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
550 சுகாதார நிலையங்களில் ஏற்கெனவே உலக வங்கியின் ஆதரவில் அத்தியாவசிய மருத்துவ கருவிகள், மருந்துகள், சோதனை வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டுக்கான திட்டம் இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
இந்த புதிய திட்டம் இலங்கை முழுவதும் 100 சதவிகிதம் பகுதியில் உள்ள மக்களுக்கு சேவையளிக்க 1000-க்கும் அதிகமான சுகாதார நிலையங்களில் சேவையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
0 Comments