2024 மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் 2024ல் 4.83 சதவிகிதமாக ஆக இருந்த நிலையில் அது 4.75 சதவிகிதமாக குறைந்துள்ளது.
அதுவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற பணவீக்க விகிதம் முறையே 5.28% மற்றும் 4.15% ஆக உள்ளது. நுகர்வோர் உணவு விலை பணவீக்கமானது 2024 ஏப்ரலில் 8.70 சதவிகிதமாக இருந்த நிலையில் அது 8.69 சதவிகிதமாக குறைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மே 2024க்கான பொது நுகர்வோர் அடிப்படையிலான அகில இந்திய பணவீக்கம், மே 2023க்குப் பிறகு மிகக் குறைவாக உள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இது செப்டம்பர் 2023 முதல் 6 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
முந்தைய மாதமான ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடுகையில் 'ஸ்பைசஸ்' ஆண்டாண்டு பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளது. கூடுதலாக ஆடை, காலணி, வீட்டுவசதி போன்றவற்றுக்கான பணவீக்க விகிதங்களும் கடந்த மாதத்திலிருந்து குறைந்துள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீடு 5 சதவிகிதமாக வளர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2023 ஏப்ரலில் பதிவு செய்யப்பட்ட 4.6 சதவிகித வளர்ச்சி விகிதத்திலிருந்து சிறிதளவு அதிகமாகும்.
அதே வேளையில், சுரங்கத் துறை ஏப்ரல் 2023 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2024ல் 6.7 சதவிகித வளர்ச்சியை வெளிப்படுத்தியது. மறுபுறம் உற்பத்தித் துறை இதே காலகட்டத்தில் 3.9 சதவிகித மிதமான வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது.
கடைசியாக மின்சாரத் துறை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் 2024ல் 10.2 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் எட்டியுள்ளது.
0 Comments