பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று காலை டெல்லியில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து இருதரப்புகளிலும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இரண்டு தலைவர்களும் மாஸ்கோவில் இருக்கும் ஆல் ரஷ்யன் எக்சிபிஷன் மையத்தை இன்று பார்வையிட்டனர். இந்த மையம் நவம்பர் 2023- ல் திறக்கப்பட்டது, இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வரலாற்றில் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அணுசக்தி துறையில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இத்துடன், இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய பகுதியாக கருதப்படும் VVER-1000 அணு உலைக்கான நிரந்தர மாதிரியான "Atomic Symphony"யும் பிரதமருக்கு காண்பிக்கப்பட்டது.
இதன் நீட்சியாக இரண்டு தலைவர்களும் கிரம்ப்ளின் மாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஆறு உயர் சக்தி அணுசக்தி அலகுகளை உருவாக்குவது மற்றும் இந்தியாவில் குறைந்த ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்களை உருவாக்குவது என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் போர் துவங்கிய பின்னர் முதன் முறையாக மோடி, புடின் சந்திப்பு நடந்துள்ளது.
0 Comments