வணிகர் சங்க கோரிக்கை மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது, ''தமிழக மக்களுக்கும் வணிகர்களுக்கும் வணிகர் நாள் வாழ்த்துகள். மே 5ஆம் தேதியை வணிகர் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை கால நிர்ணயம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் கடைகள் அமைக்க வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இதேபோன்று பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் குழு அமைக்கப்படும்.
9 சதுர மிட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை அமைதி மாநிலமாக மாற்றியிருக்கிறோம்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.
0 Comments