யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் மராத்திய ஆட்சியாளர்களின் ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் (WHC) 47வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து யுனெஸ்கோ பாரம்பரிய சின்னத்துக்கான 2024-25 ம் ஆண்டுக்கான பரிந்துரையில் 'மராத்திய ராணுவ தளங்கள்' இடம்பெற்றது.
மராத்திய ராணுவ தளங்களில், மகாராஷ்டிராவில் உள்ள சல்ஹெர் கோட்டை, சிவனேரி கோட்டை, லோஹ்காட், கண்டேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க் மற்றும் சிந்துதுர்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மாராத்திய ராணுவ கோட்டைகள் மற்றும் தளங்கள் 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் உருவாக்கப்பட்டன.
மராத்தா ராணுவ தளங்கள் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றதன் மூலமாக, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும்.
இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.
0 Comments