நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவுடன் பிரதமா் மோடி புதன்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை கடந்த ஜூலை 2-ஆம் தேதி தொடங்கிய பிரதமா் மோடி, இறுதிக்கட்டமாக தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா்.
விமான நிலையத்தில் அவருக்கு அரசுமுறைப்படி 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் நமீபியா வந்துள்ள முதல் இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். பிரதமராக அவரது முதல் நமீபிய பயணம் இதுவாகும்.
இருதரப்பு பேச்சுவாா்த்தை: தலைநகா் விண்ட்ஹோக்கில் பிரதமா் மோடி-அதிபா் நான்டி இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, வா்த்தகம், எரிசக்தி, மருந்து தயாரிப்பு, எண்ம தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சுகாதாரம்-மருந்துகள் துறையில் ஒத்துழைத்தல், நமீபியாவில் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் நிறுவுதல், இந்தியாவால் ஆதரிக்கப்படும் பேரிடா் மீட்சி உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் உலக உயிரி எரிபொருள் கூட்டணியில் நமீபியா இணைதல் தொடா்பாக 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இந்தியாவில் சிவிங்கிப்புலி (சீட்டா) மறுஅறிமுக திட்டத்துக்கு உதவியதற்காக, நமீபியாவுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரலில் கையொப்பமான ஒப்பந்தத்தின்படி, நமீபியாவில் நடப்பாண்டு இறுதியில் யுபிஐ சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
0 Comments