வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு இனக்குழுகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அம்மாநில முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். புதிய முதல்வரை முடிவு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படாமல் இழுபறி நீடித்த சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூலை 25) மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.
இது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் பிரிவு 356(3) இன் படி, ஆளுநரால் அமல்படுத்தப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சி வழக்கமாக 6 மாதங்கள் வரை நீடிக்கும். மேலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தேயி மற்றும் குகி ஆகிய சமூகங்களுக்கு இடையே மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இதில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 Comments