நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட்டில் ரூ.7,000 கோடி வரை முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கான தற்போதைய முதலீட்டு வழிகாட்டு நெறிகளிலிருந்து என்எல்சி நிறுவனத்திற்கு சிறப்பு விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது.
இந்த விதி விலக்கு என்பது 2030-ம் ஆண்டுக்குள் 10.11 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் என்ற என்எல்சி நிறுவனத்தின் லட்சிய இலக்கை எட்டுவதற்கும் 2047-ம் ஆண்டுக்குள் 32 ஜிகாவாட் என்ற அளவுக்கு விரிவுபடுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
மத்திய அரசின் பஞ்சாமிர்த இலக்குகளின் ஒரு பகுதியாக 2030-க்குள் நிலக்கரி அல்லாத எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட் அளவுக்கு உற்பத்தி செய்ய உறுதிபூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்எல்சி நிறுவனம் மிக முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும்.
தற்போது மொத்தம் 2 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறனுடன் 7 புதுப்பிக்கவல்ல எரிசக்தி நிறுவனங்களை என்எல்சி செயல்படுத்தி வருகிறது. இன்றைய அமைச்சரவையின் முடிவு நிலக்கரியை சார்ந்திருப்பதையும், இறக்குமதி செய்வதையும் குறைத்து பசுமை எரிசக்தியின் தலைமையிடத்தை இந்தியா பெறுவதற்கும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் நம்பகமான மின் விநியோகத்தை விரிவுபடுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அப்பால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவாக இந்த முடிவு அமையும்.
0 Comments