ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சிகரமான பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவையினை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இப்புதிய முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ் நாடு முன்னணியில் உள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெப்பமண்டல வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
இருவாச்சி பறவைகள் வெப்பமண்டல காடுகளில் விதைகளைப் பரப்பி, மரங்களில் மீளுருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த பறவை இனங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
இப்பறவைகளின் பாதுகாப்பிற்கான அவசரத்தை உணர்ந்து, அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விட மறுசீரமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழ் நாடு ஒரு பிரத்யேக மையத்தை நிறுவுகிறது.


0 Comments