நமது சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்விப் பயின்றிட, நமது மாநிலமெங்கும் பல்வேறு அரசுத் துறைகளின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1,250 மாணவ மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ மாணவியர்களும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ மாணவியர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இவ்வாறு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கான உணவுச் செலவு மற்றும் பல்வேறு படிகளை உயர்த்தியது, விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, அவர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சிகள் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளின் காரணமாக மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டு உள்ளது.
இதன்படி, பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும்.
0 Comments