உலக உணவு இந்தியா 2025 மாநாட்டின் நான்காவது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 25 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலகளாவிய நிகழ்வு, இந்தியாவை மீண்டும் உலகின் உணவு மையமாக நிலைநிறுத்தியதுடன், உணவு பதப்படுத்துதலில் அதன் தலைமையை வலுப்படுத்தியது.
மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமர், அங்கு உள்ள கண்காட்சி அரங்கைப் பார்வையிட்டார், ஊட்டச்சத்து, எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல், உணவைப் பெட்டிகளில் அடைக்கும் போது சுகாதார அம்சங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து திருப்தி தெரிவித்தார்.
ரஷ்யாவின் துணைப் பிரதமர் திரு டிமிட்ரி பட்ருஷேவ், மத்திய அமைச்சர்கள் திரு சிராக் பாஸ்வான், திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்து, வியட்நாம், ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளின் அமர்வுகளும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், உலக வங்கி ஆகியவற்றால் நடத்தப்பட்ட அமர்வுகளும் நடைபெற்றன.
கூடுதலாக, இந்த ஆண்டு பதிப்பின் ஐந்து மையத் தூண்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உணவு, ஊட்டச்சத்து மருந்துகள், சிறப்பு உணவுகள், தாவர அடிப்படையிலான உணவுகள் போன்ற முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய பதின்மூன்று அமர்வுகளை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் நடத்தியது.
ரூ. 25,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்ட 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இரண்டு நாட்களில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ 1 லட்சம் கோடியைத் தாண்டியது.
மாநாட்டின் ஒரு பகுதியாக, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. உலக உணவு இந்தியா மாநாட்டுடன், மேலும் இரண்டு சர்வதேச மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.


0 Comments