குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார்.
கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.
குஜராத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில், ₹26,354 கோடிக்கு மேல் மதிப்புள்ள மத்திய, மாநில அரசின் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சாரா துறைமுகத்தில் ஹெச்பி எல்என்ஜி மறுசுழற்சி முனையம், குஜராத் ஐஓசிஎல் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய திட்டம், 600 மெகாவாட் பசுமை முன் முயற்சி, விவசாயிகளுக்கான பிரதமரின் குசும் திட்டத்தில் 475 மெகாவாட் சூரிய சக்தி திட்டம், 45 மெகாவாட் படேலி சூரிய மின் சக்தி திட்டம், தோர்டோ கிராமத்தின் முழுமையான சூரிய சக்தி மின் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைத்தார்.
பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனை, ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சின் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் விரிவாக்கங்கள் உட்பட, எரிசக்தி திட்டங்கள், கடலோர பாதுகாப்பு பணிகள், நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
லோதலில் சுமார் ₹4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NHMC) முன்னேற்றத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


0 Comments