Recent Post

6/recent/ticker-posts

வக்பு (திருத்த) சட்ட மசோதா குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Supreme Court verdict on Waqf (Amendment) Bill

வக்பு (திருத்த) சட்ட மசோதா குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Supreme Court verdict on Waqf (Amendment) Bill

வக்பு (திருத்த) சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விஷயங்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர் மாநில வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படலாமா? என்கிற கேள்விக்கும் நீதிமன்றம் பதிலளித்திருக்கிறது.

நீதிமன்றம் முழு சட்டத்திற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு தடை விதித்திருக்கிறது. குறிப்பாக ஒருவர் வக்ஃப் அமைக்க இஸ்லாமிய நடைமுறையை குறைந்தது ஐந்து வருடங்கள் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையைச் சரிபார்க்க மாநில அரசுகள் விதிகளை வகுக்கும் வரை இத்தடை நீடிக்கும்.

அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலங்கள் தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் வரை, அந்த நிலத்தை வக்ஃப் நிலமாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கான பிரிவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க அனுமதிப்பது, அதிகாரப் பிரிவினைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வக்ஃப் நிலத்தின் உரிமை குறித்து தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, சர்ச்சைக்குரிய வக்ஃப் நிலம் பாதிக்கப்படாது. அதே நேரத்தில், சர்ச்சை தீர்க்கப்படும் வரை அந்த நிலங்களில் எந்த மூன்றாம் தரப்பு உரிமைகளையும் உருவாக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

அதாவது மத்திய வக்ஃப் கவுன்சிலில், 22 உறுப்பினர்களில் 4 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதேபோல, திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் பிரிவு 14 இன் கீழ் அமைக்கப்பட்ட வாரியத்தில், 11 உறுப்பினர்களில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர் மாநில வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் என்ற பிரிவில் நீதிமன்றம் தலையிடவில்லை. இருப்பினும், முடிந்தவரை, ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்குறிப்பிட்ட விஷயங்களை தங்கள் தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel