Recent Post

6/recent/ticker-posts

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும் உச்ச நீதிமன்றம் அதற்கு அளித்த பதில்களும் / 14 questions raised by the President and the Supreme Court's answers

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும் உச்ச நீதிமன்றம் அதற்கு அளித்த பதில்களும் / 14 questions raised by the President and the Supreme Court's answers

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 200/201 இன் கீழ் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் முடிவுகளுக்கு நீதிமன்றம் எந்தவிதமான காலக்கெடுவையும் விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

அதேநேரம் ஆளுநர் காலவறையின்றி நிறுத்தி வைப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது. குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 14 பதில்களின் முழு விவரங்களை பார்ப்போம்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 14 பதில்களின் முழு விவரம்:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரிடம் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?

பதில்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பிவைக்கப்படும் போது, அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம். 

ஒப்புதலை நிறுத்திவைப்பது என்பது, அரசியல் அமைப்பு பிரிவு 200-ன் முதல் நிபந்தனையின்படி மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் கட்டாயம் திருப்பி அனுப்புவதோடு இருக்க வேண்டும். (மசோதாவைச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது) முதல் நிபந்தனை நான்காவது விருப்பம் இல்லை; மாறாக, இது ஒப்புதலை நிறுத்திவைக்கும் விருப்பத்திற்குத் தகுதி சேர்க்கிறது. 

எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்டால், அது கட்டாயமாகச் சட்டமன்றத்திற்குக் திருப்பி அனுப்பப்பட வேண்டும். மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநரை நிறுத்திவைக்க அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கையைப் பலவீனப்படுத்தும். 

மசோதாவைச் சட்டசபைக்குத் திருப்பி அனுப்பாமல் ஆளுநர் வெறுமனே நிறுத்திவைக்க முடியும் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அவருக்குக் கிடைக்கும் அனைத்து விருப்பங்களைப் பயன்படுத்தும்போதும், ஆளுநர் அமைச்சரவை அளிக்கும் உதவி மற்றும் ஆலோசனையால் கட்டுப்பட்டவரா?

பதில்: பொதுவாக, ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் செயல்படுகிறார். ஆனால் பிரிவு 200-ல், ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். 

பிரிவு 200-ன் இரண்டாவது நிபந்தனையில் உள்ள "அவரது கருத்தில்" என்ற வார்த்தையின் பயன்பாட்டால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, ஆளுநர் பிரிவு 200ன் கீழ் விருப்ப அதிகாரத்தைப் பெறுகிறார். மசோதாவைத் திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவருக்காக ஒதுக்கவோ ஆளுநருக்கு விருப்ப அதிகாரம் இருக்கிறது.

3. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரால் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதி விசாரணைக்கு உட்பட்டதா ?

பதில்: பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் நீதி விசாரணைக்கு உட்பட்டவை கிடையாது. அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவின் தகுதி மறுஆய்வில் நீதிமன்றம் நுழைய முடியாது. 

இருப்பினும், நீண்ட, விளக்கம் அளிக்கப்படாத மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மை நிலவும் வெளிப்படையான சூழ்நிலையின் போது, நீதிமன்றம் ஒரு வரையறுக்கப்பட்ட ஆணையை பிறப்பித்து, ஆளுநரை ஒரு நியாயமான காலத்திற்குள் பிரிவு 200-ன் கீழ் தனது செயல்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிடலாம், ஆனால் விருப்ப அதிகாரத்தின் தகுதியைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது.

4. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 361, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்கள் தொடர்பான நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடையாக உள்ளதா?

பதில்: பிரிவு 361 நீதி மறுஆய்வுக்கு ஒரு முழுமையான தடை தான். இருப்பினும், பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நீடித்த செயலற்ற நிலையில் இருக்கும போது, இந்த நீதிமன்றம் பயன்படுத்த அதிகாரம் பெற்ற வரையறுக்கப்பட்ட நீதி மறுஆய்வு வரம்பை ரத்து செய்ய பிரிவு 361 ஐ பயன்படுத்த முடியாது. ஆளுநர் தனிப்பட்ட விலக்கைப் பெற்றிருந்தாலும், ஆளுநரின் பதவி உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

5. அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரால் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையை விதிக்க முடியுமா?

6. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதி விசாரணைக்கு உட்பட்டதா?

7. அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்த நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறையை விதிக்க முடியுமா?

பதில்கள் - கேள்விகள் 5, 6 மற்றும் 7 ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் பதிலளிக்கப்பட்டிருக்கிறது

அரசியல் பிரிவுகள் 200 மற்றும் 201-ன் உரை, நமது கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் சட்டமியற்றும் செயல்பாட்டில் எழக்கூடிய பல்வேறு சூழல்கள் மற்றும் சமநிலைப்படுத்தும் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு அதிகார மையங்கள் தங்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு ஒரு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

எனவே காலக்கெடுவை விதிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டம் இவ்வளவு கவனமாகக் காக்கும் இந்த நெகிழ்ச்சித்தன்மைக்கு முற்றிலும் முரணானது.

எனவே அரசியலமைப்புச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு இல்லாத நிலையில், பிரிவு 200-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறையால் ஒரு காலக்கெடுவை நிர்ணயிப்பது உச்ச நீதிமன்றத்திற்குப் பொருத்தமானதாக இருக்காது. 

ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதே காரணங்களுக்காக, பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நீதி விசாரணைக்கு உட்பட்டது அல்ல. அதே காரணத்திற்காக, பிரிவு 201-ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு நீதித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குக் குடியரசுத் தலைவரும் கட்டுப்பட முடியாது.

8. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் படி, ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது அல்லது வேறுவிதமாகச் செயல்படும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 143-ன் கீழ் ஒரு குறிப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?

பதில்: ஆளுநர் ஒரு மசோதாவை ஒதுக்கும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டவர் அல்ல. 

குடியரசுத் தலைவரின் அந்தநிலை திருப்தியே போதுமானது. தெளிவின்மை அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்யலாம்.

9. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200 மற்றும் பிரிவு 201-ன் கீழ் முறையே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதி விசாரணைக்கு உட்பட்டவையா? ஒரு மசோதா சட்டம் ஆவதற்கு முன், நீதிமன்றங்கள் அதன் உள்ளடக்கத்தின் மீது எந்த விதத்திலும் நீதித்துறைத் தீர்ப்பை மேற்கொள்வது அனுமதிக்கப்படுமா?

பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200 மற்றும் பிரிவு 201-ன் கீழ் முறையே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதி விசாரணைக்கு உட்பட்டவை அல்ல. மசோதாக்கள் சட்டம் ஆன பின்னரே, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

10. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் குடியரசுத் தலைவர்/ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தரவுகளை எந்த விதத்திலும் மாற்ற முடியுமா?

பதில்: இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் குடியரசுத் தலைவர்/ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உத்தரவுகளை இந்த நீதிமன்றத்தால் எந்த விதத்திலும் மாற்ற முடியாது. 

அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.

11. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் அளித்த ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ள சட்டமாகுமா?

பதில்: கேள்வி 10-ன் பதிலின் அடிப்படையில் பதிலளிக்கப்படுகிறது. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கே இடமில்லை. 

பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் சட்டமியற்றும் பங்கை மற்றொரு அரசியலமைப்பு அதிகார மையத்தால் மாற்ற முடியாது.

12. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 145(3)-ன் நிபந்தனையின் அடிப்படையில், அதற்கு முன்னுள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கத்தைப் பொறுத்துச் சட்டத்தின் கணிசமான கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் தீர்மானிக்கவும், குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைக்கவும், இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்த அமர்வுக்கும் இது கட்டாயமில்லையா?

பதில்: இந்தக் கேள்வி இந்தப் பரிந்துரையின் செயல்பாட்டுத் தன்மைக்குத் தொடர்பில்லாததால், இதற்குப் பதிலளிக்கப்படவில்லை.

13. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் செயல்முறைச் சட்டம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதா அல்லது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம் அல்லது சட்டத்தின் சாராம்ச அல்லது செயல்முறை விதிகளுக்கு முரணான அல்லது பொருந்தாத உத்தரவுகளை/வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?

பதில்: கேள்வி 10-ன் ஒரு பகுதியாகப் பதிலளிக்கப்பட்டிருக்கிறது (விளக்கம் - அரசியலமைப்புச் சட்டம், குறிப்பாகப் பிரிவு 142வின், "நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல்" என்ற கருத்தை அனுமதிக்கவில்லை என்பதை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

14. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 131-ன் கீழ் ஒரு வழக்கின் மூலமாகத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளைத் தீர்க்க உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடுக்கிறதா?

பதில்: இது சம்பந்தமே இல்லாதது எனக் கண்டறியப்பட்டதால் பதிலளிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel