தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில், ஜி20 உச்சி மாநாடு இன்று (நவ.22) தொடங்கியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு நாளை நிறைவடைகின்றது.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த ஜி20 அமைப்பின் புதிய முயற்சியில் நிதி, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்மொழிந்தார்.
இந்த முயற்சியின் முன்னுரிமையாக, போதைப் பொருள் கடத்தல் வழிகளைத் தடுப்பது, சட்டவிரோத நிதிகளை சீர்குலைப்பது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான முக்கிய நிதி ஆதாரத்தை பலவீனப்படுத்துவது ஆகியவை இருக்கும் எனக் கூறிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை மூலம் மட்டுமே இந்த சவாலை எதிர்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஃபெண்டானில் போன்ற ஆபத்தான போதைப் பொருள்களின் பரவல் மற்றும் கடத்தலைத் தடுக்கவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பொருளாதாரத்தை அகற்றவும் அவசரத் தேவை உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இத்துடன், ஜி20 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடக்கிய அவசரகால சுகாதாரக் குழுவை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.


0 Comments