பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது.
இந்நிலையில் தான் இன்று இரவு 11 மணிக்கு தேர்தல் முடிவு முழுவதுமாக வெளிவந்தது. ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் பீகாரில் மீண்டும் பாஜகவின் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.
கட்சி வாரியாக பார்த்தால் பாஜக 89 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேபோல் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதிகளில் வென்றுள்ளது.
அதேபோல் பாஜகவின் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் இன்னொரு மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியாக பாஜகவின் கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளை வென்று அசத்தி உள்ளது.
மாறாக எதிர்க்கட்சிகளின் 'மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதுதவிர, அசாதுதீன் ஓவைசியின் கட்சியை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியினர் 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


0 Comments