ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியாா் விடுதியில் 'இந்திய நகா்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025' ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய நகா்ப்புற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா், இணை அமைச்சா் டோகன் சாஹூ ஆகியோா் கலந்துகொண்டு 'நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை வழங்க, அதை தமிழக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சென்னை மாநகா் போக்குவரத்து மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான 'நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை' மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.
இந்த தேசிய விருது, சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விடியல் பயணம், பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் திட்டம், தேசிய பொது போக்குவரத்து அட்டை, மின்சார பேருந்து மூலம் மாசுபாட்டை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முன்னெடுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.


0 Comments