பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்பரப்புக் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாணயத்தைச் சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அது மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திய வெள்ளி நாணயம் என்பது உறுதியானது.
இந்த நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் ஆகும். இது கி.பி. 985 முதல் 1,014 ஆம் ஆண்டு வரை ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
இந்த அரிய வெள்ளி நாணயத்தின் இரு பக்கங்களிலும் பல முக்கியமான பொறிப்புகள் உள்ளன.
தேவநாகரி எழுத்தில் 'ஸ்ரீராஜராஜ' என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு உருவம் மலரைக் கையில் ஏந்தியவாறு நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள், மேலே பிறை மற்றும் கீழே மலர் ஆகியவை உள்ளன.
வலது பக்கம் திரிசூலமும் விளக்கும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு உருவம் சங்கை ஏந்தி அமர்ந்திருக்க, அவரது இடது கை அருகே மீண்டும் தேவநாகரி எழுத்தில் 'ஸ்ரீராஜராஜ' என்று எழுதப்பட்டுள்ளது.
இதுவரை தென்பெண்ணை ஆற்றுப்பகுதியின் மேற்பரப்புக் கள ஆய்வுகளில் 50-க்கும் மேற்பட்ட ராஜராஜ சோழன் காலத்துச் செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.
இந்த நிலையில், தற்போது முதன்முறையாக வெள்ளியால் ஆன நாணயம் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதன் தொன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
தாமிரவருணி, வைகை, காவேரி போன்ற ஆற்றுப் படுகைகளில் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


0 Comments