விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையிலானோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டதில் பழமையான புதியகற்கால கற்கருவி மற்றும் இரும்பு ஆயுதத்தினை கண்டறிந்துள்ளனர்.
பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது புதிய கற்காலத்தை சேர்ந்த கல் ஆயுதம் மற்றும் சிதைந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் மத்தியில் உடைந்த இரும்பு பொருள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கற்கருவி 6.5 செ.மீ நீளம் கொண்ட புதிய கற்காலத்தை சேர்ந்த கை கோடாரியாகும். இக்கை கோடாரி ஒரு புறம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் உள்ளது.
கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். புதிய கற்கால காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது.
தென்பெண்ணையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் முதுமக்கள் தாழியின் பானை ஓடுகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் ஆங்காங்கே சிதைந்து மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இடத்தில் பூமியின் மேற்பரப்பில் 17செ.மீ நீளம் கொண்ட உடைந்த இரும்பு ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது.
பழங்காலத்தில் இறந்தவர்களின் உடலை அல்லது எலும்புகளை பெரிய மட்பாண்டங்களான தாழியில் வைத்துப் புதைப்பது வழக்கம், இறந்தவரின் உடலுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தாழியின் பக்கத்திலேயே வைத்து புதைத்தனர்.
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் கண்டறிந்த முதுமக்கள் தாழியின் பக்கத்தில் இறந்தவர்கள் பயன்படுத்திய வாள், ஆபரணங்கள், நெல்மணிகள் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோல தென்பெண்ணையில் கண்டெடுத்த இரும்பு ஆயுதமும் சிதைந்த முதுமக்கள் தாழியின் பக்கத்தில் இருந்து மண்ணரிப்பினால் பூமியின் மேற்பரப்பில் வந்திருக்கலாம் அதுமட்டும் அல்லாமல் தென்பெண்ணை கரையோரம் புதியகற்காலம், பெருங்கற்காலம், சங்ககாலம், சோழர்காலம் வரையிலான தொல்லியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவிக்கிறார்.


0 Comments