தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை(MGNREGA) மாற்ற வகைசெய்யும், மத்திய அரசின் வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு(விபி ஜி ராம் ஜி) நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதிய திட்டத்தின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த சிறப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியதைத் தொடர்ந்து தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


0 Comments